நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவைகளின் அலுவல்கள் முடங்கின. இந்நிலையில், கூட்டத்தொடர் கடைசி வாரத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, நிலுவையில் உள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தவுள்ளது. இதேவேளையில், எதிர்கட்சிகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை, நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றன. முன்னதாக, தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.