நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் நாளில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் முடங்கியது. இந்த நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியவுடன் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதனைத்தொடர்ந்து, இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்றும் காலை அவை கூடியதும் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மீண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் பிற்பகலுக்கு மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.