பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் அந்த நாடு வரலாறு காணாத இன்னலுக்கு ஆளாகியுள்ளது. நாட்டில் மூன்றில் ஒரு பங்கு இடம் மட்டுமே காய்ந்த நிலமாக இருக்கிறது. தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற காய்ந்த இடம் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் 3.6 மில்லியன் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்து, மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் துடைத்தெரியப்பட்டுள்ளதால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகளை இழந்த மக்கள் கூடாரங்களை அமைத்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள செஹ்வான் நகரில் வீசியப் புழுதிப் புயலால் கூடாரங்கள் காற்றில் பறந்துள்ளன. கனமழையால் இதுவரை சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 30 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உணவு, காய்கறி, பழங்கள், மருந்து பொருட்கள் கூடாரம் அமைக்க தேவையான பொருட்கள் ஆகியவற்றை கொடுத்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.