15ஆவது ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடந்த சூப்பர் 4 சுற்று லீக் போட்டியில் நேற்று இரவு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளது. இறுதிச்சுற்றில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி எதிர்க்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளில் வெற்றிப்பெறாததால் இறுதிச்சுற்றுக்கு செல்லும் தகுதியை பெறாத இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் சம்பிரதாய போட்டி இன்று இரவு நடக்கவுள்ளது. முன்னதாக, விளையாட்டு மைதானத்திலேயே பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி பேட்டை ஓங்கி அடிப்பது போன்று ஆப்கான் வீரர் ஃபரீத் அகமதை மிரட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து போட்டியிலும் ஆப்கான் தோல்வியை தழுவியதால், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.