வளர்ந்த நாடுகளில் நடக்கும் வினோதமான செயல்கள் உலக அரங்கில் உற்றுநோக்கப்படும். அதேபோல, ஆஸ்கர் அரங்கில் நடைபெறும் சம்பவங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வில் ஸ்மித் தனது மனைவியை கேலி செய்தவரை கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையொட்டி சம்பவம் ஒன்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆஸ்கர் அரங்கில் நடந்துள்ளது. காட்ஃபாதர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக ஆஸ்கரின் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் மார்லன் பிராண்டோவிற்கு 1973ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த விருது வழங்கும் விழாவில் மார்லன் பிராண்டோ தனக்கு பதிலாக அமெரிக்க பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷின் லிட்டில் ஃபெதர் என்பவரை அனுப்பிவைத்து, அமெரிக்க பூர்வ குடிகளை ஹாலிவுட் திரையுலகம் புறக்கணிப்பதாகவும் அதன் காரணமாக மார்லன் பிராண்டோ இந்த விருதை ஏற்க முடியாது எனக் கூறி அவரது கடிதத்தை வாசித்துள்ளார். ஹாலிவுட் திரையுலகம் தொடர்ச்சியாக அமெரிக்க பூர்வகுடிகளைத் தவறாக சித்தரிப்பதாகவும் தெரிவித்தார். பிராண்டோவின் செயல் அப்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி நடிகை சாஷினுக்கு வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 75 வயதாகும் சாஷினுக்கு ஆஸ்கர் குழு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. அதில், அவர் அடைந்த இழப்புக்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்கும் ஆஸ்கருக்கும் உற்ற உறவு போல…