மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ”பொதுமக்களின் போக்குவரத்து தேவையை தினம்தோறும் பூர்த்தி செய்ய தற்சமயம் 3233 பேருந்துகள் இயக்க அட்டவணையிட்டு இயக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு இருந்ததன் காரணமாக பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு பேருந்துகளிலும் குறைக்கப்பட்ட பயண நடைகள் என நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளையும் அரசு விலக்கிக் கொண்டுள்ளது. சாதாரண கட்டண பேருந்துகள் அட்டவணைப்படி அனைத்து பயண நடைகளையும் இயக்காததால் பொதுமக்களிடமிருந்து தினந்தோறும் புகார்கள் வருகின்றன. பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதுடன் அரசுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நற்பெயர்க்கும் களங்கம் ஏற்படுகிறது. எனவே, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தேவையின்றி பணிக்கு வராமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். தங்களது பணி ஒதுக்கீட்டின்படி பேருந்துகளை குறித்த நேரத்தில் நடை இழைப்பின்றி இயக்க வேண்டும். சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயக்கப்படுவதை உறுதி செய்திட உத்தரவு. கடைசி பேருந்துகள், இரவு பேருந்துகள் மற்றும் இரவு வெளித்தங்கள் பேருந்துகளையும் தடையின்றி இயக்கவும் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.