சென்னையில் உள்ள தனியார் விடுதியில், நாளை ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக அணி சேர்ப்பதற்கான முயற்சிகள் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த மாதம் (ஜூன் 23ஆம் தேதி) அஇஅதிமுக கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள நிலையில், இதுதொடர்பாக கடந்த 14ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, கட்சி அலுவலகத்துக்கு வெளியே கட்சி தொண்டர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டு கோஷங்களை எழுப்பி சர்ச்சையை கிளப்பினர். இதனைத்தொடந்து காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணியளவில் முடிவுற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, ஒற்றை தலைமை குறித்து 14ஆம் தேதி மாலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். அதேவேளையில், 15ஆம் தேதி துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். இத்துடன், தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, சேலம், தேனி, ராமநாதபுரம், போன்ற தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு ஆதரவாக ஒற்றை தலைமை குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் இந்த நேரத்தில், ஒற்றை தலைமை குறித்த பேச்சு அவசியமற்றது என்றதுடன், அதிகாரம் ஏதும் இல்லை என்று தெரிந்தும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன் பேரிலே கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சராக பணியாற்றியதாக குறிப்பிட்டு பேசி இருந்தார். ஆனால், திருவண்ணாமலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஈபிஎஸ் ஒற்றை தலைமை குறித்து கருத்து ஏதும் பேசாமல் எப்போதும்போல, ஆளும் கட்சியின் செயல்பாடுகளை மட்டுமே விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக அணி சேர்ப்பதற்கான முயற்சியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருவது உட்கட்சி பூசல் காரணமாக வெளிப்படை தன்மையின்றி அதிமுக கட்சி தலைமைகள் இயங்குவதாக அக்கட்சி நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.