சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து அறிவித்திருந்தனர். இதன் முன்னோட்டமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கடந்த 14ஆம் தேதி ஆலோசனை நடத்தினர். அப்போது, கட்சி அலுவலகத்துக்கு வெளியே கட்சி தொண்டர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டு கோஷங்களை எழுப்பி சர்ச்சையை கிளப்பினர். இதனைத்தொடந்து ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவில் ஒற்றை தலைமை தீ பற்றிக்கொள்ள, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது ஆதரவாளர்களும் சந்தித்து பேசி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரகாலமாகவே அதிமுக கட்சியில் அசாதாரண சூழல் நிலவுவதாக நடைபெற இருக்கும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க நீதிமன்றத்தை நாடினர். ஆனால், நீதிமன்றமோ பொதுக்குழு நடத்த தடை விதிக்க மறுத்து, பொதுக்குழு நடத்தினால் பிரச்சினைகள் உருவாகும் என்றால் பொதுக்குழு நடைபெற இருக்கும் வானகரம் பகுதிக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்க ஆவடி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற ஓபிஎஸ் கையொப்பமிட்ட கோரிக்கை மனு ஒன்று நேற்று ஆவடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக இன்று பதில் கடிதம் எழுதியுள்ள ஆவடி காவல் ஆணையர், பொதுக்குழு கூட்டம் உள் அரங்கத்தில் நடைபெறுவதால் தடை விதிக்க முடியாது என்றும், உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைக்கோரிய வழக்குகள் இன்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே இன்று உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஒட்டியே பொதுக்குழு நடைபெறுமா என்பது தெரியவரும். அதேபோல், ஒருபுறம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான வேலைகளும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூட்டம் நடைபெற உள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அதன் வழித்தடங்கள் விழாக்கோலம் பெற்றுள்ளன. மேலும், கழகத்தின் பொருளாளர் என்ற முறையில் கழகத்தின் ஒருகிணைப்பாளர் ஓபிஎஸ்-சிடம் கட்சியின் கணக்கு வழக்குகள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாளை பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெறும் போது கட்சியின் வரவு செலவுகளை பொருளாளர் விளக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.