நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழையின் காரணமாக இதுவரை மாவட்டத்தில் பல வீடுகள் சேதமடைந்ததுடன், மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, மின் மற்றும் குடிநீா் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 18 செ.மீ., பந்தலூரில் 15 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.