சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 1.40 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 1.45 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,22,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது. இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் இன்றுவரை மேட்டூர் அணைக்கு 210 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. 150 டிஎம்சி வெள்ளநீர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்றுடன் 25ஆவது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.