இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிராக மூன்று டி-20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் புதிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி பல்லேகேலே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி ஜூலை 4ஆம் தேதி நடக்கவுள்ளது.