அ.தி.மு.க.வின் நேற்றைய பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் தேர்வு செய்யப்பட்ட அவைத்தலைவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறிய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறிய கருத்து அதிமுக வட்டாரத்தில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் , நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, பின்னர் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீதிமன்ற அறிவுறுத்தல்படியும் முறைப்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அரங்கிற்கு வந்தவர் வைத்திலிங்கம் தான். 2021 டிசம்பர் 1ஆம் தேதி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட சட்டவிதிகள் நேற்று பொதுக்குழுவில் முன்வைக்கப்படாததால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றுடன் காலாவதியாகிவிட்டது. தற்போது கழகத்தின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமை நிலை செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை நினைவுபடுத்துகிறேன். அதிமுக கட்சி விதி 19 மற்றும் 5ஆம் பிரிவின்படி அவைத்தலைவர் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் முறையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக நேற்று பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் சட்ட விதி மீறல்கள் ஏதும் இல்லை. அதன் பின்னர் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதத்தை அவரிடம் வழங்கியதன் அடிப்படையில் அடுத்து பொதுக்குழு கூட்ட தேதி அறிவிக்கப்பட்டது . திமுக என்பது வாரிசு அரசு, அதிமுகவை பற்றி விமர்சிப்பதற்கு முதலமைச்சருக்கு எந்த தகுதியும் இல்லை. முதலமைச்சர் உங்களுக்கும் கூடிய விரைவில் நேரம் வரும். உங்களது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது திமுகவில் எந்த பிரச்சினையும் வராமல் போய்விடுமா என்று நாங்கள் பார்க்கத்தான் போகிறோம், உட்கட்சி பிரச்சினையைக் கண்டு சந்தோஷம் அடைய வேண்டாம் என ஆவேசத்துடன் பேசினார்.