பெங்களூரு : கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகின்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் ஆகும். கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்ததால், 3 மணிக்குள் வந்தவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. கா்நாடகத்தில் ஒட்டுமொத்த மொத்தம் 3,632 பேர் 5,102 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் விவரம்:- பா.ஜனதா சார்பில் 707 மனுக்களும், காங்கிரஸ் சார்பில் 651 மனுக்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 455 மனுக்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 373 மனுக்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 179 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளன. இதில் 3,327 ஆண்களும், 304 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். ஒட்டுமொத்தமாக 1,720 சுயேச்சைகளும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 1,007 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. இதில் சட்டப்படி நிரப்பப்பட்டுள்ள மனுக்கள் ஏற்று கொள்ளப்படும். விதிகளுக்கு உட்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற வருகிற 24-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.