கோவையில் தென்னை விவசாயிகள், தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். பின், விழாவில் பேசிய அவர், “உலக அரங்கில் விவசாயத்தில் முதன்மையாக தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா விளங்கி வருகிறது. உலக அளவில் விவசாயத்துறையில் பல்வேறு புள்ளி விவரங்களை எடுத்துப்பார்த்தால் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. நாடு முன்னேற வேண்டும் என்றால் விவசாயிகளின் வாழ்வு முன்னேற வேண்டும். எனவே தான் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார். இதுவரை ரூ.2 லட்சம் கோடி வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.100 விவசாயிகளுக்கு கொடுத்தால் அதில் இடைத்தரகர்களின் தலையீடு காரணமாக ரூ.15 மட்டுமே சென்று சேர்ந்தது என்று குற்றஞ்சாட்டினார். எனினும், பாஜக ஆட்சியில் முழு தொகையும் விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செல்கிறது. அதேபோல், மத்திய அரசால் செயல்படுத்தும் திட்டங்களை தமிழகத்தில் மாநில அரசு செயல்படுத்துவதாக சொல்லிக்கொள்கிறது. மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசு செயல்படுத்தியதாக அறிவித்துக் கொள்ளலாம். ஆனால், தமிழக மக்கள் மனங்களில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை யாராலும் அழிக்க முடியாது” என்று அவர் பேசினார்.