அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இனி கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தக்கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலரங்கங்களில் 1,024 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் கற்றல் – கற்பித்தல் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளே தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொள்ள முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, அனைத்து கல்லூரிகளும் தங்களின் தேவைக்கேற்ப கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொண்ட நிலையில், 1,024 நிரந்தர பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு கடந்த 28ஆம் தேதி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து, நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால், ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை இன்று முதல் பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலரங்குகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏதேனும் கௌரவ விரிவுரையாளர் பணியிடம் தேவைப்படும் பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறும், அனுமதி வழங்கும்பட்சத்தில் கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொள்ளலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.