என்எல்சி நிர்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தத் தொகையை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007-ம் ஆண்டு கையகப்படுத்தியது. சம்பந்தப்பட்ட இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைத்து விடுவீர்களா?” என மனுதாரர் தரப்புக்கும், “கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்?” என என்எல்சி தரப்புக்கும் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்எல்சிக்கும் உத்தரவிட்டிருந்தது. அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும் உத்தரவாத மனுக்கள் தாக்கல் செய்யப்படன. அப்போது என்எல்சி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “தற்போது கால்வாய் தோண்டப்படும் நிலம், சுரங்கத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நிலம் மிக முக்கியமான பகுதி. மழைக்காலத்தில், சுரங்கத்துக்குள் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும். அதற்காக பரவனாறை திசை மாற்றி அனுப்புவதற்காக இந்த கால்வாய் தோண்டப்படுகிறது.
இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏற்கெனவே இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. சேதப்படுத்தப்பட்டுள்ள பகுதியை, தவிர்த்த கையகப்படுத்தியுள்ள மற்ற பகுதிகளில் பயிர்கள் அறுவடை செய்யும் வரை என்எல்சி தரப்பில் எந்த இடையூறும் கொடுக்கப்படாது. அதேநேரம், சம்பந்தப்பட்ட நிலங்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் என்எல்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
கால்வாய் வெட்டும் பணிக்காக சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்காக, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த தொகை ஏற்கெனவே தமிழக அரசுக்கு டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் 88 பேர் உள்ளனர். அவர்களுக்கான 53 காசோலைகள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவை சிறப்பு தாசில்தார் வசம் உள்ளது” என்று தெரிவித்தார். அப்போது தமிழக அரசுத் தரப்பில், இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், “ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.25 லட்சம் முழுமையாக வழங்கப்படவில்லை. மேலும், தற்போது இழப்பீடாக வழங்கப்படும் ரூ.30 ஆயிரம் என்பது மிகவும் குறைவைானது. ஒரு ஏக்கருக்கு 60 மூடை நெல் விளையும். குறைந்தபட்சம் ரூ.1350 என்று நிர்ணயித்தால்கூட, 83 ஆயிரம் ரூபாய் ஒரு ஏக்கருக்கு வரும். அதன்படி, 83 ஆயிரம் ரூபாய் இல்லையென்றால்கூட, ரூ.50 ஆயிரமாவது இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்ட சூழலில், அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு அந்த நிலத்தில் எந்த உரிமையும் இல்லை. இருப்பினும், அந்த நிலத்தில் அவர்கள் விவசாயப் பணிகளை மேற்கொண்டது ஒரு அத்துமீறிய செயல். அதேபோல், கையகப்படுத்திய நிலத்தை பாதுகாக்க தவறியது என்எல்சி நிர்வாகத்தின் தவறு.
எனவே, இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் தவறு செய்துள்ளதால், ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை வரும் ஆக.6-ம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், செப்டம்பர் 15-ம் தேதிக்கு பின்னர் அந்த நிலத்தில் விவசாய பணிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்எல்சி பாதுகாக்க வேண்டும். நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.