இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியில், முதற்கட்டமாக 50,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ”முதற்கட்டமாக 50,000 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 66 குழுக்கள் மூன்று மாதங்களில், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவிடும் பணி முடிவடையும். மேலும் இந்த பணி இனியும் தொடரும். கச்சத்தீவு மீட்பு குறித்து அவரவர் உரிமையை கூறுவதில் கருத்து கூற விரும்பவில்லை. முதலமைச்சர் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்பது மீனவர்களுக்கு உண்டான போதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவது, மீனவர்களின் ஜீவாதார உரிமை என கூறியிருக்கிறார். கோவில் சொத்து வாடகை 2012ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகை உயர்வு தொடர்ந்து, இதனை குழு அமைத்து ஆய்வு செய்து முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஓரிரு மாதங்களில் சரிசெய்யப்படும்” என அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்தார்.