நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடந்தது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவானும், சுப்மன் கில்லும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இவர்கள் இருவரும் நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடினர். ஷிகர் தவான் (72) ரன்னிலும், சுப்மன் கில் அரைசதம் அடித்து பெவிலியன் திரும்பினர். இந்த ஜோடி பொறுமையுடன் ஆடி 124 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்ததாக இறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். சஞ்சு சாம்சன் தன் கணக்கிற்கு 36 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் 80 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டியது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து 307 ரன்கள் என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பின் ஆலன்-22, டெவன் கன்வே-24, மிச்சல்-11 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களின் பவுலிங்கை நாலாபக்கமும் சிதறவிட்டு அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய லாதம் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 145 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனால், நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.