சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கினார். மேலும், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள “Companies Compliances and Financials Monitoring System” www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியம் (Tamil Nadu Emerging Sector Seed Fund): தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் துறைகளில் உள்ள புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக “தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியம்” தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தின் மூலமாக நிறுவனங்களுக்கு முதலீடுகள் வழங்கிட விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தன்னாட்சி முதலீட்டுக் குழுவால் முதல் 5 நிறுவனங்கள் இ-சந்தை (E-Sandhai) , கைகள் (Kaigal) , பிளானிடிக்ஸ் (Planytics), சூரிநோவா (Surinova) , மிஸ்டர் மெட் (Mr. Med) தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு தமிழக முதலவர் முதலீடு அனுமதி கடிதங்களை வழங்கினார்.