சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிவுத்துறை சார்பில் போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும், அதிக ஆவணங்கள் பதிவாகும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி மற்றும் திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் தேவைப்படின் இணைய வழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றினைப் பெறும் வசதி ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.