12ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் NEET, CUET, JEE Main ஆகிய தேர்வுகள் அடுத்தடுத்து வருவதன் காரணமாக தங்களால் தேர்வுகளுக்கு தயாராவது கடினம் என்றும், ஒரே தேதியில் இருவேறு தேர்வுகள் அட்டவணையிடப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு தேர்வில் பங்கேற்க இயலாமல் போய்விடும் என்றும் தெரிவித்து வந்தனர். இதனால், NEET, CUET, JEE Main தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்றும், ஒரே தேதியில் வெவ்வேறு தேர்வுகளை நடத்தக்கூடாது என்றும், தேர்வுகளுக்கு இடையே தயாராக போதிய கால அவகாசம் வேண்டும் என்றும் வலியுறுத்தி தேசிய தேர்வு முகமை, மத்திய கல்வி அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு டுவிட்டர் வாயிலாகவும், கடிதங்கள், மின்னஞ்சல்கள் வாயிலாகவும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தனர். மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்துள்ள தேசிய தேர்வு முகமை ( NTA ), கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டில் இருந்து கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை எட்டும் நோக்கில் அனைத்தும் தெளிவாக திட்டமிடப்பட்டிருப்பதாகவும், உயர்கல்வி நுழைவுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், மாணவர்கள் அவரவர் எழுதும் தேர்வுகளுக்கு ஏற்கனவே உரிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டதாகவும், எனவே எந்தக்காரணத்தைக் கொண்டும் தேர்வுகள் தள்ளிவைக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, ஜூலை 17-ல் NEET – UG தேர்வு, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை CUET – UG தேர்வு, ஜூலை 21 முதல் 30 வரை JEE Main தேர்வு ஆகியவை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை ( NTA ) அறிவித்துள்ளது.