சுவிட்சர்லாந்து நாட்டின் லுசானே நகரில் நடந்து வரும் டைமண்ட் லீக் போட்டியில் இந்திய தடகளப் பிரிவில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.08 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் முதல்முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் பெற்றுள்ளார். இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஜூரிச்சில் செப்டம்பர் 7 மற்றும் 8 ம் தேதிகளில் நடைபெறவுள்ள டைமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள். இதனால் டைமண்ட் லீக் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் 2023 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதியையும் அடைந்துள்ளார் நீரஜ் சோப்ரா. முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா 87.58 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.