நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை நேற்றுமுன்தினம் (9ஆம் தேதி) திருமணம் செய்துகொண்டார். இருவரும் கடந்த 6 ஆண்டுகளாகவே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். முன்னதாக இருவரும் பழகத்தொடங்கி காதலித்த காலம் முதல் திருமண பத்திரிக்கையை சாமியிடம் பூஜித்தது வரை திருப்பதி ஏழுமலையான் மீது மிகுந்த நம்பிக்கைக்கொண்டு இருந்தனர். தங்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் திருப்பதி ஏழுமலையானை தொடர்ச்சியாக தரிசனம் செய்யும் பழக்கம் கொண்டு இருந்தனர். அந்தவகையில், நயன்-விக்னேஷ் இணை திருமணமான அடுத்த நாளான நேற்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ஏற்கனவே திருமண தினத்தன்று நயன்-விக்னேஷ் புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டன.
அதைத்தொடர்ந்து அவர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது. ஆனால், அந்த புகைப்படத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருப்பதி மாடவீதிகளில் காலில் செருப்புடன் சென்றதால் எதிர்ப்பும் வலுத்தது.
இதனையடுத்து, காலில் செருப்புடன் கோயிலில் சென்ற நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், செருப்பு அணிந்து சென்றது குறித்து தங்களால் புண்படுத்தப்பட்டவர்களிடம் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.