நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தவறியதாக சொல்லப்படும் விவகாரங்கள் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மத்திய அரசைக் கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர். இதையொட்டி, டெல்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல் துறையினர் பாதுபாப்பை வலுப்படுத்தியுள்ளனர். குறிப்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள அக்பர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தரைத் தவிர, டெல்லியின் மற்ற பகுதிகள் முழுவதும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜந்தர் மந்தரைத் தவிர டெல்லியின் பிற இடங்களில் காங்கிரசார் போராட்டம், தர்ணா நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.