சென்னை நேரு ஸ்டேடியத்தில், 61ஆவது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ளது இந்த போட்டியில் 700-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கனிமொழி 13.62 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். அதே போட்டியில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மொமிதா மொண்டல் (13.86 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை தபிதா (14.09 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். மேலும் ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்தாந்த் உமானந்தா திங்கலியா (13.93 வினாடி) முதலிடமும், தமிழக வீரர் சுரேந்தர் (14.18 வினாடி) 2ஆவது இடமும், பஞ்சாப் வீரர் தருண்தீப் சிங் (14.21 வினாடி) 3ஆவது இடமும் பிடித்தனர். உயரம் தாண்டுதலில் மகாராஷ்டிரா வீரர் சர்வேஷ் அனில் (2.24 மீட்டர்) தங்கப்பதக்கமும், கர்நாடகத்தை சேர்ந்த ஜெஸ்சி சந்தேஷ் (2.21 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பாரதி விஸ்வநாதன் (2.18 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.