நேஷனல் ஹெரால்டு வழக்கில், வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ராகுல் காந்தியிடம் ஒவ்வொரு நாளும் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாகவே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ராகுல் காந்தி பதிலளிக்கும் பட்சத்தில் அவர் மீதான விசாரணை முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில், 16ஆம் தேதி ஒருநாள் இடைவெளிக்கு பிறகு நான்காவது நாளாக கடந்த 17ஆம் தேதி மீண்டும் அவர் மீதான விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய் சோனியா காந்தியை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டி உள்ளதால், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக்கோரி கோரிக்கைவிடுத்து அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி மனு அளித்திருந்தார். பின்னர், கோரிக்கையை ஏற்று, விலக்கு அளித்த அமலாக்கத்துறை, ஜூன் 20ஆம் தேதியான இன்று மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று காலை ராகுல் காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். தவிர, சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் வியாழக்கிழமை (23ஆம் தேதி) நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.