சென்னை: ஜி20 கல்விக்குழு மாநாடு, சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று தொடங்கியது. முதல்நாள் கூட்டம் முடிந்தபின் மத்திய கல்வித்துறை செயலர்கள் கே.சஞ்சய் மூர்த்தி(உயர்கல்வி), சஞ்சய் குமார் (பள்ளிகல்வி) ஆகியோர் கூறியதாவது:- vஜி 20 கல்வி மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதான கல்வி திட்டங்களுடன் திறன்பயிற்சி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் கல்வியின் தரம் உயர வழிசெய்யும்.வருங்காலத்தில் கல்வித்துறையில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும். தொழில்நுட்பக் கல்வி மட்டுமின்றி, மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்த்து, தொழில் முனைவோராக மாற்றுவதற்கும் பயிற்சி தரப்பட உள்ளது. அதேபோல, அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படும்.
‘நான் முதல்வன்’ சிறப்பான திட்டம்: தேசிய கல்விக் கொள்கையை அடுத்த ஒன்றரை ஆண்டில் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசின் ‘நான்முதல்வன்’ திட்டம் சிறப்பாக உள்ளது. இத்தகைய திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த பரிந்துரை செய்யப்படும். சென்னையை தொடர்ந்து புனே, அமிர்தசரஸ் போன்ற இடங்களில் கல்வி மாநாடு நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.