நானி உடன் நஸ்ரியா நடித்து வெளிவர இருக்கும் தெலுங்கு திரைப்படமான ’அன்டே சந்திரானிக்கி’ தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி வெளிவர இருக்கிறது. விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்படத்தின் கதாநாயகன் நானி, நாயகி நஸ்ரியா மற்றும் நடிகர்கள் அழகம் பெருமாள், ரோகினி ஆகியோர் கலந்துகொண்டனர். நகைக்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், நடிகர் நானி ‘ஷ்யாம் சிங்கா ராய்’ போன்ற வரலாறு மற்றும் காதல் கலந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடித்து வெளியாகும் படம் என்பதால், அடடே சுந்தராவின் மீது திரைத்துறையின் பார்வை திரும்பி உள்ளது.
இத்துடன் திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களை தயாரிப்பது மற்றும் சில துணை கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த மலையாள நடிகை நஸ்ரியா தற்போது முழுவீச்சியில் மீண்டும் கதாநாயகியாக அடடே சுந்தரா திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இதனாலும், அடடே சுந்தரா மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும், நகைச்சுவை மற்றும் காதல் கலந்த திரைப்படம் என்பதால், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படி இருக்கும் உத்தரவாதம் அளிக்கிறது படக்குழு. இந்த மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஜூன் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாவதால் வசூலிலும் படத்தின் பேருக்கும் ஏற்ப அடடே சொல்லவைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாக கூறிவருகின்றனர்.