‘எங்கள் அண்ணா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ‘மச்சான்’ என்று அனைவரையும் செல்லமாக அழைத்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத்குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சில காலம் இருந்து வந்ததுடன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது 40வது பிறந்தநாளில் அறிவித்திருந்தார் நடிகை நமீதா.
மேலும் நிறைமாத கர்ப்பிணியான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடந்தது. இதில் நடிகை ராதிகா, பூர்ணிமா பாக்கியராஜ், நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் ஸ்ரீகாந்த், பிக்பாஸ் புகழ் ஆரவ் மற்றும் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.