சிபிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் 12ஆம் தேர்வு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை மாதம் 22ஆம் தேதி) வெளியிடப்பட்டது. தேர்வில் 92.71 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 91.25% மாணவர்களும் 94.54% மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், திருவனந்தபுரம் மண்டலம் 98.82% தேர்ச்சியுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் இரண்டாமிடத்தையும் 97.79% தேர்ச்சியுடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 7% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பயின்ற மாணவி யோகேஷ்வரி, 496 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் மூன்றாம் இடமும், மாநில அளவில் முதல் இடமும் பிடித்து தமிழகத்துக்கு பெருமைத் தேடிக்கொடுத்துள்ளார். மேலும், அதே பள்ளியில் பயின்ற மற்றொரு மாணவி நந்திதா, 488 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.