கோஹிமா / ஷில்லாங்: நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக இடையேயான கூட்டணி மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா இன்று நடைபெற இருக்கிறது. ஆளுநர் இல. கணேசன், ரியோவுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. கான்ராட் சங்மா இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் இவது கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் கான்ராட் சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால், பாஜகவின் இரண்டு எம்எம்ஏக்கள் உள்பட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது.
கான்ராட் சங்மாவோடு இன்று 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தேசிய மக்கள் கட்சிக்கு 8, கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு 2, பாஜக மற்றும் மலைவாழ் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒன்று என அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரும் பங்கேற்றனர்.