சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பேசிய முதலமைச்சர், ”44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது மிகப்பெரிய பெருமை. 2022ஆம் ஆண்டிற்கான போட்டியை உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடத்துவதை கைவிடுவதாக உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசு உரிய நேரத்தில் உரிய முயற்சியை மேற்கொண்டதன் காரணமாகவே போட்டி சென்னையில் நடைபெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த மாநில அரசு ரூ. 92 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் கவுண்டவுன் தொடங்கப்பட்ட நேரத்தில் இந்த மாநாடு நடப்பது மிகவும் சரியானதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், நானும் கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் உள்ளவன்தான், மேயராக இருந்த போதும் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். எத்தகைய பணி சூழலாக இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்த்து விடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.