கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைக்கும் பொக்கிஷங்கள் மிகுந்த சிறப்புடையவை. அவற்றைப் பாதுகாக்கும் வகையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், சாலைகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், சிமென்ட் காரிடர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் முடிவுற்ற பல்வேறு பணிகள் தொடக்க விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.மேலும், அரியலூரில் ரூ.30.26 கோடியில் முடிவுற்ற 51 பணிகளையும், பெரம்பலூரில் ரூ.221.80 கோடியில் முடிவுற்ற 23 பணிகளையும் தொடங்கிவைத்து, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27,070 பேருக்கு ரூ.52 கோடியிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9,621 பேருக்கு ரூ.26.02 கோடியிலும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதிக மக்கள் தொகை, பெரிய பரப்பு கொண்ட மாநிலங்கள் கூட, தொழில் வளர்ச்சியில் தமிழகத்தைக் காட்டிலும் பின்தங்கியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தொழில் வளர்ச்சியில் தேக்கம் நிலவினாலும், அதற்கு முன் முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு அமைத்த அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக ஈர்த்து வரும் முதலீடுகளாலும்தான் இந்த நிலையை எட்டியுள்ளளோம். இவ்விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆ.ராசா, எம்எல்ஏ-க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், எம்.பிரபாகரன், மாவட்ட ஆட்சியர்கள் அரியலூர் பெ.ரமண சரஸ்வதி,பெரம்பலூர் ப.வெங்கடப்பிரியா மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.