உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகள் என 14 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து பங்கேற்கின்றனர். இதில் உறுப்பு நாடுகள் இடையே பொருளாதாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற தகவலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.