சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நடுக்குப்பம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்ச்சியாக நடுக்குப்பம் பகுதிக்கு உட்பட்ட 120-வது வார்டில் நடுக்குப்பம் மீனவ பஞ்சாயத்தின் சார்பில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன் பிறகு அங்கிருந்து நடுக்குப்பம் பகுதி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் அமைக்கப்படும் சாலையோர கழிவு நீரேற்று உந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.1 கோடியே 24 லட்சம் திட்டமதிப்பீட்டில் நடுக்குப்பம் 1 முதல் 8 தெருக்கள் வரையிலும் நீளம் பாஷா தர்கா தெருவிலும் செயல் படுத்தப்படும் இந்த திட்ட பணிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெறுவார்கள். இந்த திட்டம் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் போது சாலையோர கழிவுநீர் அகற்று நிலையம் மூலம் புதிதாக கழிவு நீர் குழாய் அமைக்கும் பணி உள்பட மற்ற பணிகளும் இதோடு இணைக்கப்படும்.
பின்னர் டாக்டர் பெசன்ட் சாலையில் 116 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்படும் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பிறகு சி.என்.கே. சாலை பகுதிக்கு உட்பட்ட 114-வது வார்டு பகுதியில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இன்று காலையில் மட்டும் 7 நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து பங்கேற்றார். அவருடன் மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மேற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும் பணிகள் குழு தலைவருமான நே.சிற்றரசு, பகுதி செயலாளர்கள் மதன் மோகன், காமராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.