தமிழ்நாட்டில் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில், வழக்கு விசாரணை நடந்துக்கொண்டு இருந்த போதே, ஒரு வழக்கில் மனுதாரர்கள், எதிர் மனுதார்களிம் பணத்தை திரும்பப்பெற்றுக்கொண்டதால் வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றஞ்சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இருதரப்பு கருத்துக்களையும் நீதிமன்றம் பதிவு செய்துக்கொண்டு வழக்கை தரத்து செய்தது. தற்போது, இதுத்தொடர்பான வேறு ஒரு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு அமைச்சருக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் தாக்கலான மனுவும், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று பணி வழங்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுத் தொடர்பாக வேலை மோசடி பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் சண்முகம் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.