சென்னை நந்தனத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பண்டிகையை முன்னிட்டு, பணியாளர்களுக்கு கருணை தொகையை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தாண்டு தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகள் விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.80 கோடி விற்பனையாகும் என எதிர்பார்த்த நிலையில், ரூ.110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். பல்வேறு கட்ட தர பரிசோதனைக்குப் பின்னர் மக்களை சென்றடையும் ‘ஆவின் பொருட்கள் தரம் குறித்து தனியார் போட்டி நிறுவனங்கள் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஆவின் பொருள்களில் புழு பல்லி பூச்சி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தூண்டுதலின் பேரில் யாராவது அவதூறு பரப்பினால், இந்த நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இத்துடன், விவசாயிகள் பயன்படக்கூடிய வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.