கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,40,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே அணை நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம் வழியாக நொடிக்கு 23,000 கனஅடி நீரும், சுரங்க மின் நிலையம் வழியாக 1,17,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில், அணையின் நீா்மட்டம் 120.11 அடியாகவும், நீா் இருப்பு 93.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடா்வதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீர்வரத்தைப்பொருத்து அணையில் இருந்து நீர் அதிகப்படியாக வெளியேற்றப்படலாம் என்பதால், காவிரிக் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.