பெங்களூரு : கர்நாடகத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழு திட்டம் தொடங்கப்படுவது குறித்து பசவராஜ் பொம்மை பேசியதாவது:- கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன.அதே போல் இளைஞர்களுக்காக சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழுக்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுக்கு சுழல் நிதி, தொழில் செய்ய வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அந்த குழு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த ஆண் சுயஉதவி குழுக்கள் திட்டம் வருகிற 23-ந் தேதி தொடங்கப்படுகிறது. மேலும், மாநிலத்தில் இதுவரை 6 ஆயிரத்து 509 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 5 ஆயிரத்து 393 குழுக்கள் அமைக்க வேண்டியுள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்திற்கு தலா 2 குழுக்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்று பசவராஜ் பொம்மை பேசினார்.