புதுடெல்லி: ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு பெங்களூருவில் இன்று (பிப். 24) நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடக்க உரையில் கூறியதாவது: ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் கொரோனா போன்ற பெருந்தொற்று தற்போது ஏற்பட்டு உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
பருவநிலை மாற்றம் உள்பட சர்வதேச சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் வளர்ச்சி திட்டங்களுக்கான வங்கிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. உற்பத்தியாளர்களும், வாடிக்கையாளர்களும் எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதன் பிரதிபளிப்பு உலக பொருளாதார வளர்ச்சியோடு இணைவதை உங்களால் உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். உலகில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உங்களின் ஆலோசனை இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கடந்த சில ஆண்டுகளில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பாதுகாப்பானதாகவும், நம்பிக்கையானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருப்பதை இந்தியா உறுதிப்படுத்தி இருக்கிறது. அரசின் செயல்திறனை, அனைவருக்குமான வளர்ச்சியை இது மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் இந்த காலத்தில், டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான இந்திய தொழில்நுட்பமான UPI தொழில்நுட்பத்தை ஜி20 நாடுகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. வளர்ச்சிக்காக தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியா ஒரு முன்மாதிரி நாடாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.