நடிகையும், மாடலுமான மீரா மிதுன் யூடியூப் சமூக வலைதளத்தில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக சாம் அபிஷேக் என்ற மீராவின் நண்பர் ஆகிய இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த மீரா மிதுன் மற்றும் அவரின் நண்பர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் ஜாமினில் வெளிவந்த மீரா மிதுன் கடந்த 6ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்பு மீரா மிதுன் எங்கு தேடியும் கிடைக்காததால் விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார். இந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணையின் போது அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி, செல்போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்யதுள்ளதால் பலமுறை வழக்கு விசாரணைக்கு வந்தும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலவில்லை என்று நிதிபதியிடம் காவல்துறையினர் கூறியுள்ளனர். 2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் தலைமறைவாகி இருக்கும் மீரா மிதுனை காவல்துறையினர் கைது செய்யாததால் காவல் துறையினரிடம் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது தாய் சியாமளா புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.