சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை யம்மா… பேசும்மா… இங்க வாம்மா என்றெல்லாம் பேசியுள்ளார். இதையடுத்து, என்னதான் மேயர் வயதில் இளைவராக இருந்தாலும் அவர் வகிக்கும் பதவிக்கு மரியாதையளிக்காமல் ஒருமையில் அமைச்சர் பேசலாமா என்று சர்ச்சையானது. இதையொட்டி மேயர் பிரியா அளித்துள்ள விளக்கத்தில், “அமைச்சர் என்னை செய்தியாளர்களை சந்திக்கச் சொன்னது சாதாரண ஒரு நிகழ்வுதான். அமைச்சர் கே.என்.நேரு என்னை மிரட்டவோ, கடுமையான வார்த்தைகளால் பேசவோயில்லை. எல்லா இடங்களிலும் என்னை மதிக்கக்கூடியவர். நல்ல முறையில் அவருடைய பொண்ணு போல் என்னைப் பார்த்துக்கொள்வார். அமைச்சர் ஒருமையில் பேசியதாக நினைப்பதைவிட நான் உரிமையில் பேசியதாக தான் நினைக்கிறேன். கட்சியில் மிகவும் மூத்தவர் என்பதோடு எங்கள் துறையின் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மேயர் ஆகிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி தொடர்பாக நான் எந்த பணியை முன்னெடுத்துச் சென்றாலும் மிகுந்த ஆதரவோடு இருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. இதுவரை நான் கேட்டு எதுவும் வேண்டாம் என்று சொன்னதில்லை” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரியாராஜன் மேயராக பதவியேற்றதில் இருந்தே அவருக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என பேசப்பட்டு வந்த நிலையில் அமைச்சர் மேயரிடம் உரையாடிய விதம் விவாத பொருளாகியுள்ளது.