மணிப்பூர் சம்பவம் பற்றி தான் ஏற்கெனவே அறிக்கை, ட்விட்டர் வாயிலாக தனது கருத்துகளை, கண்டனங்களை பதிவு செய்தும், அதை அறிந்துகொள்ளாதது முதல்வரின் ஆட்சி முறையை மக்களுக்கு வெளிச்சம் காட்டியுள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 28) அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மணிப்பூர் சம்பவம் குறித்து நான் ஏதும் பேசவில்லை என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் கலவரம் துவங்கிய உடனேயே அதனைக் கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாகக் காப்பாற்ற வேண்டும் என்றும் அஇஅதிமுக சார்பில் 8.5.2023 நாளிட்ட அறிக்கை மூலம் திமுக அரசின் முதலமைச்சருடைய கவனத்தை ஈர்த்திருந்தேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதிலும், குறிப்பாக, பெண்கள் பாதுகாப்புடன் நடமாட வேண்டும் என்று காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டத்தின் ஆட்சியை நடத்தியது. தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் – 7. ஆனால், திமுக அரசின் 2022-ஆம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பின்படி நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை குற்றங்கள் – 58. இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.
எனவே, இனியாவது சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பற்றத் தன்மை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறுதல் போன்றவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தும்; கடும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியும், வாக்களித்த தமிழக மக்கள் சிரமமின்றி வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.