மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ மூலம் மத்திய அரசிடன் தகவல் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், “திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2026ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியும். கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த தகவல்கள் இல்லை” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, மதுரை மாவட்டம் தோப்பூரில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.