நடிகர் சிம்புவின் 50ஆவது திரைப்படம் மஹா. இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மஹா திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்திலும், ஹன்ஷிகா மோத்வானி, நாசர், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக மதுரை குருவிக்காரன் சாகௌ மேம்பாலத்தின் மீது மதுரை எஸ்.டி.ஆர் வெறியர்கள் என்ற ரசிகர்கள் சார்பில் 1000 அடி நீளத்துக்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. எனினும், காவல்துறையினரிடம் முறையான அனுமதி வாங்கப்படாததால், காவல்துறையினர் கண்டித்ததை அடுத்து பேனர் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பேனர் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், பேனர் வைத்தபோது அதனை ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றதால், மஹா திரைப்படத்துக்கும் தற்போது பிரம்மாண்ட விளம்பரம் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க இதுபோன்ற பேனர்கள் வைக்கப்படுகின்றன. கோலிவுட் நடிகர்கள் யாருக்கும் இதுவரை 1000 அடியில் பேனர் வைக்கப்படாததால் சிம்பு ரசிகர்களின் செயல் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தையடுத்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.