மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பாஜக எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் இரு அவைகளும் அமளி நீடித்து வருகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்து வருகின்றனர். முதல் இரண்டு நாட்களிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளியால் எந்த அலுவலும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.