நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் புதிய பட்டியல் அடங்கிய புத்தகத்தை மத்திய மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இதில் சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தவர், ஊழல் நாடகம், ஒட்டுகேட்பு, திறமையற்றவர், கொரோனா பரப்புபவர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குழந்தைத்தனம், குற்றவாளி உள்ளிட்ட வார்த்தைளை பயன்படுத்தக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு இந்தி வார்த்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை அவை நடவடிக்கையின் போது உறுப்பினர்கள் பயன்படுத்தினால் அந்த வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும். இந்த அறிவிப்பை அடுத்து, மக்கள் பிரதிநிதிகளின் கருத்து சுதந்திரம் ஜனநாயக நாட்டில் நசுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.