சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- சமூக நலத்துறை சாா்பில், முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதிநிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது.
மத்திய அரசின் விதிகள் படி, திட்டப்பயனாளிகளின் ஆதாா் இணைப்பு கட்டாயமாகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள், ஆதாா் எண்ணை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன், புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரியால் சான்றொப்பம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஏதேனும் ஒன்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.