தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினத்தில் காயல் சமூகநீதி பேரவை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு சமூகநீதி காவலர் காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது. பின்னர், பேசிய அவர், ”மத்தியில் ஆளும் பாஜக கட்சி அரசு இந்த நாட்டை மதம் சார்ந்த நாடாக மாற்ற முயற்சிக்கிறது. ஒரு அரசு மதம், இனம், மொழி சார்ந்து இருக்கக் கூடாது. நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். சமூக நீதி காக்கப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் மற்றும் சங்கப் பரிவார அமைப்புகளுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியான பொதுவான எதிரிகள் என்றாலும் முதல் நிலை எதிரிகள் அல்ல. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதல் நிலை எதிரி. மேலும் வருகின்ற 2024-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் சூழல் மாறுபடும்” என்றும் அவர் பேசியுள்ளார்.