சென்னை: மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரிக்கும் நோக்கத்திலும், வினியோகம், தேவை, பயன்பாடுகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்திடும் வகையிலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை-2023 என்ற திருத்திய கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கொள்கையின் இலக்கு மின்வாகன உற்பத்தித்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த தமிழ்நாடு மின் வாகன கொள்கை-2023-ன் முக்கிய நோக்கமாகும். பொது போக்குவரத்து திட்டங்களை மின்மயமாக்குதல் மற்றும் ‘ஸ்மார்ட் மொபிலிட்டி’ திட்டங்களை ஊக்குவிப்பதற்காக பிரத்தியேகமாக மின் வாகன நகரங்கள் உருவாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரியை திரும்ப வழங்குதல், மூலதன மானியம், விற்றுமுதல் அடிப்படையிலான மானியம் அளித்தல், சிறப்பு மேம்பட்ட மின்கல வேதியியல் சலுகை வழங்குதல் என பல்வேறு வகைப்பட்ட முதலீட்டு சலுகைகளில் எதாவது ஒன்றையோ, மற்ற சலுகைகளையோ பெற வாய்ப்புகள் உள்ளன.
மின் வாகனச் சூழலமைப்பை மேம்படுத்தும் வகையில், மின் வாகன தொழில் பூங்காக்கள் அமைத்தல், விற்பனையாளர் சூழலமைப்பை உருவாக்குதல், பிரத்யேக மின்வாகன இணையதளம் உருவாக்குதல், வழிகாட்டி நிறுவனத்தில் மின்வாகன ஆதரவுச் சேவை பிரிவு உருவாக்குதல், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக தலைமைச் செயலாளர் தலைமையில், முக்கியத்துறைகளின் செயலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட மின் வாகன வழிகாட்டுதல் குழுவை மாற்றி அமைத்து, இக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.